தமிழ் இசை அமைப்பாளருக்கு கன்னட சினிமா அகாடமி விருது தமிழ் இசை அமைப்பாளரான ராஜ் பாஸ்கருக்கு கன்னட சினிமா அகாடமி 'சாதனையாளர் விருது' வழங்கி சிறப்பித்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, ராஜ் பாஸ்கர் இசையின் பால் ஈர்க்கப்பட்டதற்கு அவரது தந்தையே காரணம் என்று தான் கூறவேண்டும். ஏனெனில் அவரது தந்தையான காளிதாஸ் ஏவிஎம் ரெகார்டிங் தியேட்டரில், சவுண்ட் ஆபரேட்டராக பணியாற்றிய காலத்தில், ராஜ் பாஸ்கர் அவரை சந்திக்க அங்கு அடிக்கடி செல்வதுண்டு. பல வேளைகளில் இசையை கேட்டுக்கொண்டே மெய்மறந்து இருந்த ராஜ் பாஸ்கரிடம் ஒரு முறை அவரது தந்தை 'உனக்கு இசையில் அவ்வளவு ஆர்வமா' என்று கேட்டுள்ளார். அதன் பிறகு அவரை வயலின் கற்றுக்கொள்ள அனுப்பியுள்ளார். இசை அமைப்பாளர் எம் .எஸ். விஸ்வநாதன் இசை குழுவில் இருந்த ராஜப்பா மாஸ்டரிடம் கிளாசிக்கல் வயலின் கற்றேன். அதன் பின்பு தன்ராஜ் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் வயலின் கற்றேன். அங்கு ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் கீ போர்டு கற்றுக்கொண்டு இருந்தார். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. அவரோடு இணைந்து தன்ராஜ் மாஸ்டரிடம் பயிற்சி பெற்றதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் பல உதவிகள் செய்துள்ளனர். குறிப்பாக கணேஷ் எனக்கு அவருடைய இசைக்குழுவில் என்னையும் வயலின் வாசிக்க அனுமதித்தார். பழம்பெரும் நடிகரான முத்துராமன் நடித்த 'வாடகை வீடு' படத்தில் நானும் வயலின் வாசிக்க ஆரம்பித்தேன். மேலும் 'பூக்களை பறிக்காதீர்கள்' படத்தில் வரும் 'பூக்களைத்தான் பறிக்காதீங்க' பாடலுக்கும் நானும் வயலின் வாசித்தேன். அதன் பின்னர் நான் எம்.எஸ்.வி. இசை குழுவிலும் இடம்பெற்றேன். எம்.எஸ்.வி. மற்றும் அவரது உதவியாளரான ஜோசப் கிருஷ்ணா ஆகியோர் எனக்கு செய்த உதவிகள் ஏராளம். நான் இசை அமைப்பாளராக அறிமுகமான எனது முதல் தமிழ் படம் 'தேரோடும் வீதியிலே' ஆகும். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் கீ போர்டு வாசித்தார் என்பது சிறப்பு.